புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-06-01 14:29 GMT

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுகாதார பணிகள் தொழில்நுட்ப உதவியாளர் மதுரம் பிரைட்டன் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில், மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் "நமக்குத் தேவை உணவு - புகையிலை அல்ல" என்ற தலைப்பில், உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரி அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி வரவேற்றார். சுகாதாரப் பணிகள் தொழில்நுட்ப உதவியாளர் மதுரம் பிரைட்டன் தலைமை தாங்கினார். கிரேஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் ரிச்சர்ட், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்க இயக்குநர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் கூறியதாவது:

இந்தியாவில் புகையிலேயே பயன்படுத்துவதனால் தினமும் 2500 பேர் என்ற விகிதத்தில் வருடத்திற்கு 9 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். வாய், குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் 90 சதவீதம் புகையிலை பழக்கத்தால் மட்டும் வருகிறது. புகையிலை பிடிப்பதனால் 89 சதவீதம் பேரில் 18 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இந்தப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

20 வயதிலிருந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களில் 50 சதவீதம் பேர் இந்தப் பழக்கம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கிறார்கள். புகையிலை உபயோகம் வாய், தொண்டை, நுரையீரல், மூச்சுக் குழாய், உணவு குழாய், சிறுநீரகப்பை, சிறுநீரகம், கணையம், கர்ப்பப்பை வாய் ஆகிய உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுகிறது.

மேலும், நுரையீரல் கோளாறுகளையும், மூச்சுதிறலையும் ஏற்படுத்தும். இருதயம் மற்றும் ரத்தக் குழாய் தொடர்பான நோய்களை தீவிரமாக்குகிறது.இனப்பெருக்க கோளாறுகளை ஏற்படுத்துகிறது. புகை பிடிப்பதால் அருகில் உள்ளவர்களுக்கு நுரையீரல் மற்றும் மூக்கில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், புற்றுநோய், மாரடைப்பு, கண், மூக்கு, தொண்டையில் எரிச்சல் ஏற்படுத்தும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் மூச்சுத் திணறல், காய்ச்சல், ஆஸ்துமா, வளர்ச்சி குறைவு, அறிவு வளர்ச்சி குறைவு, மூளை வளர்ச்சி குறைவு, பிறந்தவுடன் மரணம் ஏற்படுகிறது. என்ற கருத்துக்களை கூறினர்.


அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு "தடுப்போம் புகையிலை " எந்த தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விழிப்புணர்வு நாடகம் ஆகியவை நடைபெற்றது. பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற ஷாலினிக்கும், இரண்டாவது பரிசு பெற்ற சன்னா குமாரிக்கும், ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜெப்ரினுக்கும், இரண்டாம் பரிசு பெற்ற முத்து ரோஷினிக்கும் மற்றும் நாடகக் குழுவினருக்கும் சுகாதாரப் பணிகள் தொழில்நுட்ப உதவியாளர் மதுரம் பிரைட்டன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

அதனைத் தொடர்ந்து "புகையிலை ஒரு உயிர் கொல்லி" "அதனை ஒருபோதும் உட்கொள்ளாதே" என்ற நோக்கத்தில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் கல்லூரி கணிதத் துணைத் தலைவர் டாக்டர் அந்தோனிரெக்ஸ், தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அழகு லட்சுமி, சுகாதாரப் பணிகள் சமூக சேவகர் ரோசாரி பாத்திமா உட்பட பள்ளி மாணவ மாணவிகள் 200 பேர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரப் பணிகள் அலுவலர்கள், மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் மருத்துவர் வேணுகா நன்றி கூறினார்.

Similar News