தூத்துக்குடியில் 94 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கல்..!

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 94 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.;

Update: 2023-11-17 12:40 GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் ஆணைகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலையில் 94 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4.89 கோடி கல்விக்கடன் ஆணைகளை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:

மாணவ, மாணவியர்களிடையே உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்காக கல்வி நிறுவனங்களையும், வங்கியாளர்களையும் ஒருங்கிணைத்து இன்றைய தினம் இந்த கல்விக்கடன் முகாம் நடைபெற்றது.

மாணவர்களின் கனவுகளுக்கும், பொருளாதார வசதிக்கும் இடையே இருக்கக்கூடிய இடைவெளியானது கனவுகளை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. பெற்றோரின் பொருளாதார வசதி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு நமது கல்வி செலவு சுமையாக இருக்க விரும்பவில்லை என்ற நிலை யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காத்தான் கல்வி கடன் வழங்கப்படுகிறது.

இந்த முகாமிற்கு 14 வங்கிகள் பங்கேற்று கல்வி கடன் வழங்கி உள்ளனர். கல்வி கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. கல்வி கடனை நீங்கள் 6 மாதம் முதல் ஒரு வருடம் கழித்து வேலைக்கு சென்ற பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப செலுத்தலாம். எனவே நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் உங்களது கனவுகளை அடைய வேண்டும். உங்களது கனவுகளை அடைந்து வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு செல்ல வாழ்த்துகள் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், வ.உ.சி. கல்லூரி பொறுப்பு முதல்வர் தர்மர் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News