வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க .பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.;

Update: 2023-12-19 12:38 GMT

தூத்துக்குடியில் மழை வெள்ளப் பாதிப்புகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென்மாவட்டங்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. மழை பாதிப்பு குறித்து ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை.

அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறியதால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் இத்தகைய பாதிப்புகளை தடுத்திருக்க முடியும். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வீர வசனம் மட்டும் தி.மு.க.வினர் பேசி வருகின்றனர்.

இனியும் இந்த அரசு மெத்தனப் போக்கோடு செயல்படக் கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய அரசு விரைந்து செயல்பட வேண்டும். இந்த அரசு செயலற்று இருப்பதால் மக்கள் துன்பப்படுகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி சென்று மக்களின் பிரச்னைகளை பிரதமரிடம் எடுத்துரைக்க செல்லவில்லை. இந்தியா கூட்டணி எப்படி தேர்தலை சந்திப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ய சென்றுள்ளார்.

மீண்டும் ஆட்சிக்கு வந்து செய்த ஊழலை மறைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடும் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அற்புதமான குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டதன் விளைவு தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்கிட வேண்டும் என பிரதமரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டாக வந்து பார்வையிட்டு சென்று இருக்கிறார்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News