திராவிட மாடல் ஆட்சி என்பது கற்பனை என சொல்கிறார் எச். ராஜா

திராவிட மாடல் ஆட்சி என்பது கற்பனை என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா கூறி உள்ளார்.

Update: 2023-05-07 15:08 GMT

தூத்துக்குடியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா பேட்டியளித்தார்.

தூத்துக்குடியில் இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆண்டு விழா கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச். ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக இருண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை கொள்ளை செயின் பறிப்பு போன்றவை நடைபெறுகிறது. சென்னையில் பட்ட பகலில் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன.

மேலும், தமிழக முழுவதும் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழக ஆளுநர் சட்டம் ஒழுங்கு சீரழிவு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். அதை அறிக்கையாக அளித்தால் இந்த ஆட்சி இருக்காது.

திராவிட மாடல் என்பது கற்பனையானது. தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தி இளைஞர்களை சீரழித்ததுதான் திராவிட மாடல். ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை போன்று இதுவரை எங்கும் ஏழு நாட்கள் சோதனை நடைபெற்றது கிடையாது.

ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது அந்த நிறுவனத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று கூறியவர்கள், இரண்டு நாட்களுக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதே போன்ற சோதனைகளை தாங்கள் பலமுறை பார்த்திருப்பதாக கூறியதன் மூலம் அவர்களுடைய பினாமியாக ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்படுவது என்பது தெரிகிறது.

கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மையை கூறி இருக்கும் படம். பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தைத் தவிர வேறு யாரும் சினிமா துறையில் படம் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

இவ்வாறு எச் ராஜா கூறினார்.

Tags:    

Similar News