அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த கூடாது: ஓ.பி.எஸ் தரப்புக்கு எச்சரிக்கை
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இனிமேல் அ.தி.மு.க கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கும் மற்றும் பொதுச்செயலாளர் நியமனத்திற்கும் எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்ததோடு அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும், அதில் விரைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என இன்று தீர்ப்பளித்தது.
நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில், அமைப்பு செயலாளர் சின்னத்துரை உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வினர் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் வேண்டும் என முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த முடிவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவர் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டு அதிமுக எடப்பாடியார் கையில்தான் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் மாநாடு நடத்தப்பட்டு 20 லட்சம் தொண்டர்கள் ஒன்று திரண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா, அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச் செயலாளர் என உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இனி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவர் ஆதரவாளர்கள் அதிமுக கொடி, வேட்டி மற்றும் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது.
ஓ.பி.எஸ்ஸுக்கு அ.தி.மு.க.வில் இனி இடமில்லை. திமுக அல்லது டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.