திமுக இந்துகளுக்கு எதிரான கட்சி கிடையாது: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
திமுக இந்துகளுக்கு எதிரான கட்சி அல்ல என தூத்துக்குடியில் சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்காக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. இருப்பினும், திருப்பனியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலுக்கு கடந்த மாதம் தமிழக அரசு சார்பில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டது.
இந்த அறங்காவலர் குழுவினர் மீண்டும் திருப்பணிகளை விரைவு படுத்தியுள்ளனர். வைகுண்டபதி பெருமாள் கோயிலில் கல் மண்டப பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைபாடுடன் கூடிய கருங்கல் கற்கள் கொண்டு வந்து ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து திருப்பணி குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று வைகுண்டபதி பெருமாள் கோயில் சென்றார். அப்போது அவருக்கு பெருமாள் கோயில் அறங்காவலர் குழு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருப்பணிகள் நடைபெறுவது குறித்து அமைச்சர் கீதாஜீவன், அறங்காவலர் குழு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் திருப்பணிகளை விரைந்து முடிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்டபதி பெருமாள் கோயிலில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திருப்பணிகள் காலதாமதம் ஏற்பட்டு அப்படியே விடப்பட்டது. தற்போது திமுக அரசு இந்த திருப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடத்தப்படும்.
தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால், அவை உடனடியாக மீட்கப்பட்டு அந்தந்த கோயில் வசம் ஒப்படைக்கப்படும். திமுகவில் 95 சதவீத இந்துக்களே உள்ளனர். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சிலர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கருத்து என்னவென்றால் மத உணர்வு இருக்கலாம் மதவெறி இருக்கக் கூடாது என்பதே. ஆகையால் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி கிடையாது. இது தொடர்பாக சிலரின் பொய் பிரசாரங்கள் எடுபடாது. தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமைதியாக இருப்பது தான் தமிழக அரசின் எண்ணம். தமிழகம் அமைதியாக திகழ்ந்து வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.