பட்டா கேட்டு மாற்றுத்திறனாளி கோரிக்கை; ஒரே நாளில் நிறைவேற்றிய தூத்துக்குடி ஆட்சியர்
புகார் தெரிவித்த ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து, மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.;
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், புதூர் குறுவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. மாற்றுத்திறனாளியான இவர், நேற்று காலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு சென்று உள்ளார். இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளிக்க தான் சென்றதாகவும் அங்குள்ள ஒரு அலுவலர் தன்னிடம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் பிற அடையாள அட்டை கேட்டதாகவும் மாரிமுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மாரிமுத்துவிடம் உடனே விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார். இதையெடுத்து, மாரிமுத்து விளாத்திக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அவர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருந்தார். மாரிமுத்துவுக்கு இரண்டு கைகளும் கால்களும் முழுமையாக செயல்படவில்லை. அவருக்கு தந்தை இல்லை தாயார் உள்ளார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மாரிமுத்து என்பவருக்கு வயது 41 இன்னும் திருமணம் ஆகவில்லை.
மாரிமுத்துவின் தந்தை பெயரில் ஒரு வீடு உள்ளது. அவர் வீட்டு அருகே சூப் தயாரித்து விற்பனை செய்வதாகவும் தனக்கு உதவியாக தனது தாயார் இருப்பதாகவும் மாரிமுத்து விளாத்திக்குளம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஒரு வீடு மட்டும் இருப்பதால் தனது குடும்பத்தில் அனைவரும் ஒரே வீட்டில் வசிக்க இயலாது என்பதாலும், தான் வசிக்கும் நாகலாபுரம் கிராமத்தில் தகுதியான காலி மனை இல்லை என்பதாலும் தனக்கு எந்த கிராமத்தில் வீட்டுமனை கிடைத்தாலும், தாயாருடன் அங்கு சென்று வசிக்க தனக்கு விருப்பம் உள்ளது என்றும் மாரிமுத்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அந்த காரணங்கள் கருத்தில்கொண்டு விளாத்திகுளம் கிராமத்தில் ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தில் மாரிமுத்துவுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி மூலம் தனது நிலையை தெரிவித்த மாரிமுத்துவின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மூலம் நிறைவேற்றப்பட்டது. பட்டா வழங்கியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த மாரிமுத்து விளாத்திக்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்டோவில் இருந்தபடியே இலவச வீட்டு மனை பட்டாவை பெற்று சென்றார். புகார் தெரிவித்த ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிப்பதாக மாற்றுத்திறனாளி மாரிமுத்து கூறினார்.