இந்தியாவில் ஆண்டுக்கு 73 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய்: மருத்துவர் தகவல்
இந்தியாவில் ஆண்டுக்கு 73 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர் ஆர்த்தி கண்ணன் தெரிவித்தார்.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 73 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதாக தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர் ஆர்த்தி கண்ணன் தெரிவித்தார்.
உலக சர்க்கரை நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த மாதம் முழுவதும் உலக சுகாதார நிறுவனம் சர்க்கரை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகள், சமூக அமைப்புகள் சார்பில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தூத்துக்குடியில் உள்ள சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் உள்ள சர்க்கரை நோய் மையத்தில் இன்று உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், தைராய்டு, ரத்தத்தில் உள்ள யூரியா அளவு, மூன்று மாத சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்யப்பட்டன.
மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன விதமான உணவுகளை எடுத்துக் கொள்வது எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோகா பயிற்சியும் சர்க்கரை நோயாளிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு முகாமில் ஏராளமான சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து, சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் ஆர்த்தி கண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 73 லட்சம் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆறில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும் தெரிவித்தார்.