மாலத்தீவில் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை மீட்க வலியுறுத்தல்
மாலத்தீவு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.;
மாலத்தீவு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடியில் மாதம் தோறும் மீனவர்களுக்கான குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு மீனவ பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கான பிரச்னை மற்றும் மீனவர் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் முறையிட்டனர்.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 12 பேரை எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்ததாக மாலத்தீவு கடற்படையினர் கைது செய்த விவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அவர்கள் சென்ற விசைப்படகினை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் 30 நாட்களுக்குள் அபராத தொகையினை கட்ட வேண்டும் எனவும் மாலத்தீவு அரசு மீனவர்களிடம் கூறி உள்ளது.
எனவே, மத்திய மாநிலை அரசுகள் தலையீட்டு தருவைக்குளம் மீனவர்களின் விசைப்படகினை மீட்டுத் தர மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என தருவைக்குளம் பகுதி மீனவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதேபோல, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மீனவர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் முறையிட்டனர். இந்தக் கூட்டத்தில், மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.