தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1030 விவசாயிகளுக்கு ரூ.15.62 கோடி பயிர்கடன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில்1030 விவசாயிக ளுக்கு கடனாக ரூ. 15.62 கோடி வழங் கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்;

Update: 2023-08-31 12:22 GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பேசினர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுநாள் வரை 146.04 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 124 மெ.டன் நெல், 18 மெ.டன் கம்பு, 303.47 மெ.டன் உளுந்து, 14.82 மெ.டன் பாசிப்பயிறு, 1.8 மெ.டன் நிலக்கடலை, 0.3 மெ.டன் சூரியகாந்தி ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வரும் பருவத்திற்கான விதைகள் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 3007 மெ.டன் யூரியா, 2771 மெ.டன் காம்ப்ளக்ஸ், 3540 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 480 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன. நடப்பு ஆகஸ்ட், 2023 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 1500 மெ.டன் யூரியா, 1610 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 635 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

2021-22-ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூ.13.23 கோடி,பாசிப்பயறுக்கு ரூ.4.69 கோடி, சூரியகாந்தி பயிருக்கு ரூ.0.84 கோடி,நெல் பயிருக்கு ரூ.5.23கோடி,மக்காச்சோளம் பயிருக்கு ரூ.15.67 கோடி,கம்பு பயிருக்கு ரூ.4.08 கோடி,பருத்தி பயிருக்கு ரூ.3.83 கோடி,நிலக்கடலை பயிருக்கு ரூ.0.21கோடி,எள் பயிருக்கு ரூ.0.03 கோடி,சோளம் பயிருக்கு ரூ.4.43 கோடி என ஆக மொத்தம் ரூ.52.24கோடி 46756 விவசாயிகளுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டுத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்; வெங்காயம், வாழை, கொத்தமல்லி மற்றும் சிவப்புமிளகாய் பயிர்களுக்கு ரூ.23.86 கோடி இழப்பீட்டுத் தொகையானது15087 விவசாயிகளுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டது.

மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்புற செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் அதன் உறுப்பினர்கள் மட்டும் அல்லாது இதர விவசாய பெருமக்களின் விளை பொருட்களை நடப்பு சந்தை விலையில் கொள்முதல் செய்வதுடன் அவர்களுக்கு தேவையான விவசாய இடு பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி சரியான விலையில் இடு பொருட்கள் பெறுவதுடன் விளை பொருட்களை விற்று பயனடையலாம்.

வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வேளாண் உட்கட்டமைப்பினை ஏற்படுத்திட தேவையான நிதியினை வங்கி கடனாக பெற்று வட்டியில் 3 சதவீதம் தள்ளுபடி பெற விண்ணப்பித்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 25.8.2023 வரை ரூ.15.62 கோடிக்கு 1030 விவசாயிகளுக்கு விவசாயபயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 752 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.11.31 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News