தூத்துக்குடியில் சிறுதானிய தொழில்நுட்ப கையேட்டினை வெளியிட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சிறுதானிய தொழில் நுட்ப கையேட்டினை ஆட்சியர் லெட்சுமிபதி வெளியிட்டார்.

Update: 2023-10-26 15:11 GMT

சிறு தானிய தொழில் நுட்ப கையேட்டினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி வெளியிட்டார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சிறுதானிய தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, சிறுதானிய தொழில்நுட்பக் கையேட்டினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அதை விவசாயிகளிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுநாள் வரை 213.44 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. நடப்பு அக்டோபர் மாத தேவைக்கு மாவட்டத்திற்கு 4300 மெ.டன் யூரியா, 1240 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 1000 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள வேளாண் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் திருவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வாழை பழுக்க வைக்கும் கூடம் ஆகியவற்றினை பயன்படுத்தி கொள்ள விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளை பொருட்களுக்கு பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 34 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில்15 எண்கள் சிறப்புற செயல்பட்டு வருகிறது. அவற்றின் மூலம் அதன் உறுப்பினர்கள் மட்டும் அல்லாது இதர விவசாய பெருமக்களின் விளை பொருட்களை நடப்பு சந்தை விலையில் கொள்முதல் செய்வதுடன் அவர்களுக்கு தேவையான விவசாய இடு பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி சரியான விலையில் இடு பொருட்கள் பெறுவதுடன் விளை பொருட்களை விற்று பயனடையவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் மூலம் 15.10.2023 வரை ரூ. 55.78 கோடிக்கு 5344 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3930 சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.41.22கோடி விவசாயபயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

1.10.2023 முதல் 31.12.2023 வரை மத்திய மாநில அரசுகளின் அறிவுரையின்படி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்களால் இல்லம் தேடி உழவர் கடன் அட்டை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி விண்ணப்பத்தினை பெற்று முன்னோடி வங்கி மேலாளரிடம் உரிய விபரங்களுடன் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டடு உள்ளது.

விவசாயிகள் தங்கள் வங்கிகணக்கு புத்தக நகல், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை தாங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் நேரடியாகவோ அல்லது வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலமாக அளித்து உழவர் கடன் அட்டைபெற்று பயிருக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ 1.60 லட்சம் வரை பயிர் கடன் பெற்று பயன்பெறலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, மண்டல இணை இயக்குநர் (கூட்டுறவுச் சங்கங்கள்) முரளி கண்ணன், மேலாண்மை இயக்குநர் நடுக்காட்டுராஜா, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News