இந்திய டேக்வாண்டா அணிக்கு தேர்வான தூத்துக்குடி மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு
இந்திய அணி சார்பாக டேக்வாண்டா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான 144 சென்டி மீட்டர் உயரப் பிரிவில் தூத்துக்குடி காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மகிஷா பிரியங்கா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று, இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
தொடர்ந்து, ஐரோப்பா ஒன்றியம் சரோஜ்வா, போஸ்னிகா எனும் இடத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெற உள்ள உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு இந்திய அணி சார்பாக மாணவி மகிஷா பிரியங்கா கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை லெபனான் நாட்டில் நடைபெற உள்ள 5 ஆவது ஆசிய அளவிலான டேக்வோண்டா போட்டியிலும் இந்திய அணி சார்பாக மாணவி மகிஷா பிரியங்கா கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணி சார்பாக உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்ற வீராங்கனை மகிஷா பிரியங்காவை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து பாராட்டினார்.
இதேபோல, 28 ஆவது தேசிய இளையோர் எறிபந்து போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை புதுச்சேரியில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் தூத்துக்குடி கமாக் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் செந்தில், திவா, யஸ்வந்த் குமார், ஆகாஷ், மாணவி பிளஸ்ஸி ஷேரன் ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
தேசிய இளையோர் எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றதற்காக மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், டேக்வாண்டா பயிற்சியாளர் ராமலிங்க பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.