தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆட்சியர் லெட்சுமிபதி திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-10-31 15:31 GMT

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியர் லட்சுமிபதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆட்சியர் லட்சுமிபதி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் சமையல் கூடம் மற்றும் தூர்வாரப்பட்ட பண்டாரம்பட்டி, முள்ளிக்குளம், சி.வ.குளம் ஆகிய குளங்களை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரத்தில் 18 மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் சமையல் கூடத்தினை ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, அரிசி, பருப்பு, எண்ணெய் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் ஆட்சியர் லட்சுமிபதி கேட்டறிந்தார். மேலும், அங்கு குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் உணவினை சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உபட்ட கணேஷ்நகர் பகுதியில் அமைந்துள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் உரம் தயாரிப்பதை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வடகிழக்கு பருவமழையின்போது தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வெள்ள நீர் புகுவதை தடுக்கும் வகையில் காலாங்கரையில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் ஓடையினை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் உள்ள தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ள பண்டாரம்பட்டி, முள்ளிக்குளம், சி.வ.குளம் ஆகிய குளங்களை நேரில் பார்வையிட்டு ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News