தூத்துக்குடி கடல் தீவுகளில் கடலோர பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனை
தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளில் கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், வனத்துறையினர் கூட்டாக சோதனை மேற்கொண்டனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தீவுகள் அமைந்துள்ளன. தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுகள் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். வெளி நபர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதியாகவும் இந்த தீவுகள் உள்ளன.
இருப்பினும், இந்த தீவுப் பகுதிகளில் போதைப் பொருட்கள் கடத்தும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி புகார் எழுந்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துவோரும், இலங்கையில் இருந்து பொருட்களை கடத்தி வருவோரும் இந்த தீவுகளை பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், அன்னிய நபர்கள் சிலர் தீவு பகுதிகளில் சட்ட விரோதமாக உள்ளே நுழைந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கடத்தி செல்வதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள வான் தீவு, காரைசல்லி தீவு, காசுவாரி தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் ஏதும் நடைபெறுகிறதா? என்பதை அறியும் வகையிலும், அன்னிய நபர்களின் ஊடுருவல் உள்ளதா? என்பதை கண்காணிக்கும் வகையிலும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்திய கடலோர காவல் படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்த குழுவினர் இன்று காலை முதல் கடலோர பாதுகாப்பு குழும படகுகள் மற்றும் வனத்துறை படகில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த சோதனையில் 25-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த சோதனையின்போது வெளியாட்கள் நடமாட்டம் குறித்து ஏதும் கண்டறியப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.