மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முதல்வர் தயாராக உள்ளார்: அமைச்சர் கீதாஜீவன்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.;

Update: 2023-09-02 12:36 GMT

தூத்துக்குடியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி கோட்டத்தில் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் கோட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் வழங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் இயலாமைக்கு ஏற்றவாறு உபகரணங்கள் வழங்கப்படும். முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. அதற்கு தேவையானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெற்றவர்களுக்கு ரூ. 1200ஆகவும், ரூ.1500 பெற்றவர்களுக்கு ரூ. 2000ஆகவும் உயர்த்தி உள்ளார்கள்.

மேலும், 90 சதவீதம் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பெற்றோர்களுக்கும் உதவித்தொகை வழங்கும் வகையில் ரூ. 2000 உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கூடுதலாக சேர்த்து ரூ. 3000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளாள். அதனைப் பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கான முகாம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கான முன்பணத்தை தமிழ்நாடு அரசே செலுத்துகிறது. அரசின் திட்டங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்துக்கூறி அனைவரும் பயனடைய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பிரம்மநாயகம், பேச்சு பயிற்சியாளர் ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Similar News