தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க முதல்வர் திட்டம்
தமிழ்நாட்டில் பசுமைப்பரப்பினை 33 சதவீதமாக அதிகரிக்க முதல்வர் பணியாற்றி வருகிறார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.;
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் காசோலையினை வழங்கினார்.
தொடர்ந்து “புல்வாய் தடங்கள் தென்கோடி வெளிமான் மந்தைகளைப் பின் தொடர்தல்" என்ற புத்தகத்தினையும் வெளியிட்ட அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி படகு குளம் அருகில் அலையாத்தி (மாங்குரோவ்) மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று மரக்கன்றுகள் நடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அலையாத்தி மரக்கன்றுகள் பழைய காயல் பகுதியில் 50 ஏக்கரில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ளன. இன்று நகரப்பகுதியில் உள்ள கடலோரப்பகுதி மற்றும் முள்ளக்காடு துறைமுகப்பகுதியில் அலையாத்தி மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலையாத்திக்காடுகள் கடல் அரிப்பை தடுக்கும். இயற்கை பேரிடர் வரும்போது அலையாத்திக்காடுகள் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். மேலும்இ மீன்கள் உற்பத்தியும் அதிகரிக்கும். பிச்சாவரம் பகுதியில் 3 கி.மீ. படகில் சென்றுதாhன் அலையாத்திக்காடுகளை பார்க்க முடியும். ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து சென்றே அலையாத்திக்காடுகளை பார்க்க முடியும். இந்தக்காடுகள் எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக்கூடியதாக இருக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக மரக்கன்றுகளை நட வேண்டும் என அனைத்து துறைகளையும் வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 23 சதவீதம்தான் பசுமைப்பரப்பு இருக்கிறது. அதனை 33 சதவீதமாக கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வகிறார். இந்தப்பணியில் அனைவரின் பங்கும் இருப்பதால் நிச்சயமாக வனப்பரப்பு அதிகரிக்கும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.