தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வருமான வரித்துறையினர் சோதனை
தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் மத்திய வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நூறு ஆண்டுகளை கடந்த பழமையான வங்கிகளில் ஒன்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகும். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளைக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள இரண்டு இடத்தில் செயல்பட்டு வரும் தலைமை அலுவலகத்தில் இன்று காலை வழக்கமான வங்கி அலுவல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, தலைமை அலுவலகத்தில் வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வருமானத்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் திடீரென தலைமை அலுவலகத்துக்குள் சென்று வருமான வரி தொடர்பான சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சோதனை எதற்காக நடைபெறுகின்றது என்று உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கணக்குகள் தொடர்பாகவும் மற்றும் அவர் சார்ந்த பினாமிகளின் கணக்குகள் தொடர்பாகவும் மேற்படி சோதனை நடைபெறுவதாக ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
இருப்பினும், தற்போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணியாளர் சேர்க்கை நடைபெறுவதாகவும் அதில் பணம் பெற்றுக் கொண்டு காலி பணியிடங்களை சிலர் நிரப்புவதாக வந்த தகவல்களின் அடிப்படையில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக மற்றொரு தரப்பும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து மத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தூத்துக்குடியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.