ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமன தேர்வை நடத்த வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு மூலம் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.;
தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்.
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்வு பெற்ற சுமார் 70 ஆயிரம் பேர் ஆசிரியர் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நியமன தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. ஆனால் அந்த நியமன தேர்வும் இதுவரை நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெற்ற ஆசிரியர்கள் உடனடியாக தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நியமனத் தேர்வுகளை நடத்தி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்வு பெற்றுள்ள ஆசிரியர்களை காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
மாறாக தற்காலிக ஆசிரியர் என்று குறைந்த சம்பளத்திற்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள ஆசிரியர்கள் மனு அளித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு உடனடியாக நியமனத் தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று மனு அளிக்க வந்த ஆசிரியர் அருணா என்பவர் தெரிவித்தார்.