பால் விலை உயர்வு பற்றி யாரும் பேசுவது இல்லை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லும் ஒரே தலைவராக பாரத பிரதமர் மோடி இருக்கிறார் என்றார் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்;
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்தார். பின்னர், அவர் தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டு காலத்தில் இதுவரை 42 கோடி பேருக்கு மேலாக எல்லோருக்கும் வங்கிகளில் பணம் போடும் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளார். பாரத பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு கூரை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறி உள்ளது.
பொருளாதார ரீதியில் இந்தியா உலகில் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் உலக அளவில் இந்திய பொருளாதாரம் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்தது விடும். இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரிகளை மத்திய அரசு அதிகமாக கொடுத்தது.
தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லும் ஒரே தலைவராக பாரத பிரதமர் மோடி இருக்கிறார். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக சில நாட்களில் பால் விலையை குறைத்தனர். தற்போது பால் விலையை உயர்த்தி விட்டனர். அதுபற்றி யாரும் பேசுவது இல்லை. ஆனால், சமையல் எரிவாயு விலை உயர்வை பற்றி மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர். மக்களுக்கு இலவசமாக கேஸ் கொடுத்திருக்கிறார்கள். அதை யாரும் சொல்லுவது இல்லை என நயினார் நாகேந்திரன் எம்.எல்ஏ. தெரிவித்தார். பேட்டியின்போது, காந்தி எம்.எல்.ஏ, பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா ஆகியோர் உடனிருந்தனர்.