மசாலா பொட்டலத்தில் வண்டுகள்: ரூ. 16 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மசாலா பொட்டலத்தில் வண்டுகள் இருந்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 16,010 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.;

Update: 2023-12-11 12:01 GMT

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம். (கோப்பு படம்).

மசாலா பொட்டலத்தில் வண்டுகள் இருந்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 16,010 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சார்ந்தவர் மதியழகன். இவர், பாளையங்கோட்டை-திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் மல்லிப் பொடி உள்ள மசாலா பாக்கெட்டை வாங்கியுள்ளார்.

அதைப் பயன்படுத்துவதற்காக திறந்த போது அதில் சிறு சிறு வண்டுகள் இருந்துள்ளது. உடனே கடைக்காரரிடம் கொண்டு சென்று மாற்றுப் பொருள் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் மாற்றுப் பொருள் தர மறுத்ததுடன் மதியழகனை உதாசினப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மதியழகன் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மல்லிப் பொடியின் விலையான ரூ. 10.90, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூபாய் 6,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 16,010 தொகையை இரு மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.

Tags:    

Similar News