தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கடல் அட்டைகள், கஞ்சா, புகையிலைப் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள், பீடி இலைகள் உள்ளிட்ட பொருகள் கடத்தப்பட்டு வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
இந்த கடத்தலை தடுக்கும் வகையில், கடலோர மாவட்டங்களில் தமிழக போலீசார், கடலோர காவல் படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி இனிகோநகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் இனிகோ நகர் கடற்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையின்போது, அங்கிருந்து கடத்துவதற்காக லோடு வேனில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ எடையுள்ள 43 பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேன் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையை கண்டதும் தப்பி ஓடிய கடத்தல் கும்பலை கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனங்களை கியூ பிரிவு போலீசார் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.