தூத்துக்குடியில் காவல் துறையினருடன் விசைப்படகு மீனவர்கள் வாக்குவாதம்

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைப்படகு தொழிலாளர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2023-10-13 15:11 GMT

தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விசைப்படகு தொழிலாளர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 250 விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன. தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்குச் சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்ப வேண்டும் என்பது இவர்களுக்கான விதிமுறை ஆகும். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம்.

இந்த மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளை நம்பி சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே சரியாக மீன்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வாரத்தில் ஆறு நாட்களாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்த நிலையில் விசைப்படகு உரிமையாளர்கள் மீன்களுக்கு விலை கிடைக்காத காரணத்தால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கடலுக்கு செல்ல வேண்டும் என்று விசைப்படகு உரிமையாளர்கள் முடிவு செய்து அறிவித்தனர்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசைப்படகு தொழிலாளர்கள், வாரத்தில் ஆறு நாட்களும் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும், தங்களது கோரிக்கை குறித்து மீன்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம் முன்பு விசைப்படகு தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.‌ ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் கடற்கரை சாலையில் மீன்பிடி துறைமுகம் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர் உள்ளிட்டோர் விசைப்படகு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடி துறைமுகம் முன்பு ஒன்று கூடி, வாரத்தில் 6 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர்களை பிளவு படுத்தி தொழில் முடக்கத்துக்கு காரணமாக உள்ள விசைப்பட உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிட்டல் பேனர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, விசைப்படகு மீன்பிடி துறைமுகம் முன்பு கூடி இருந்த விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, அமைதி பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News