போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஆயுள் காலம் முழுவதும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-09-04 14:47 GMT

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வேலாண்டி.

போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஆயுள் காலம் முழுவதும் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த வேலாண்டி (50) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, வேலாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா புலன் விசாரணை செய்து கடந்த 26.04.2021 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட வேலாண்டி என்பவருக்கு எஞ்சிய ஆயுள் காலம் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதையெடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலாண்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா, குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் லெட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News