தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
தூத்துக்குடியில் மாவட்ட காவல்துறை சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பல இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக கையெழுத்திடும் முகாம் நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கையெழுத்திட்டு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து, தூத்துக்குடி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ்;, மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பேரணி, கையெழுத்திடும் முகாம் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதால் இளம் வயதிலேயே ஆண்மையை இழந்து வயதானவர்கள் போல உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாது அவர்களது எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
எனவே, இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு எதிர்காலங்களில் சிறந்தவர்களாக வரவேண்டும்.
இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர் முன்பு செல்பி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் உள்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.