தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 75). இவருக்கு கடந்த 13 ஆம் தேதிக்கு முன்பு தொடர்ந்து காய்ச்சல் இருந்து உள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது. ஏற்கெனவே ராமச்சந்திரனுக்கு முதுமை காரணமாக சிறுநீரக கோளாறும் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலை நீடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக ராமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இரவு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை சார்பில் ராமச்சந்திரனின் உடல் கொரோனா கவச பாதுகாப்புடன் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் கடந்த நான்காம் தேதி இறந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் கொரோனா நோய் தொற்று காரணமாக பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்த மாதத்தில் மட்டும் தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் இருவர் உயிரிழந்துள்ளதால் மாவட்டம் முமுவதும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது