தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பிரிவில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நடைபெற்றது.;
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த காலம் அனைவருக்கும் பசுமை நிறைந்த நினைவுகளை கொண்டதாகும். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்னாள் மாணவர்கள் மீண்டும் தாங்கள் படித்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் தன்னுடன் படித்தவர்களை சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை இளங்கலை இயற்பியல் படித்தவர்கள் சந்தித்த நிகழ்ச்சி கல்லூரியில் இன்று நடைபெற்றது. காமராஜ் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை கனகபிரபா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காமராஜ் கல்லூரியில் பயின்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் பல முன்னணி நிறுவனங்களில் பணி புரிந்து வரும் 25 பேர், குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் கல்லூரி அனுபவங்கள் மற்றும் தற்போது கல்லூரி அடைந்திருக்கும் வளர்ச்சி ஆகியவற்றை சுட்டிகாட்டினர். முன்னாள் மாணவர்களில் சிறந்த தொழில்முனைவோராக விளங்குவோருக்கும், தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த முன்னாள் மாணவர்கள் பலருக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காமராஜ் கல்லூரி முதல்வர் பூங்கொடி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நாராயணசாமி, வில்லியம் ஜேம்ஸ், வெள்ளை பாண்டியன், பாஸ்கரன், அருள்மணி, கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
முன்னதாக இதில் கலந்து கொண்ட பழைய மாணவ மாணவியர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளை சுற்றி பார்த்ததுடன் அங்கு இருந்த வகுப்றைகள் மற்றும் ஆய்வகத்துக்கு சென்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.