தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு..!
தூத்துக்குடியில் 95 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான்களை அமைச்சர்கள் வழங்கினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விவசாய பெருமக்களிடையே சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களைச் சார்ந்த வேளாண் பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம் 2023-2024 கீழ், ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 54 விவசாயிகளுக்கும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 18 விவசாயிகளுக்கும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 15 விவசாயிகளுக்கும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 6 விவசாயிகளுக்கும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 2 விவசாயிகளுக்கும் என மொத்தம் 95 விவசாயிகளுக்கு மானியத்தில் ரூ.77.35 லட்சம் மதிப்பிலான பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் (வேளாண்மைப் பொறியியல்) கிளாட்வின் இஸ்ரேல், உதவி செயற்பொறியாளர்கள் ஜெகவீரபாண்டி, செவ்வேல், சங்கரநாராயணன் மற்று அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.