தூத்துக்குடியில் 10 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்!
தூத்துக்குடியில் 10 நாட்களுக்குப் பிறகு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் இலங்கை அதனை ஒட்டிய கடல் பகுதி மன்னார் வளைகுடா கடல் பகுதி குமரி கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் சுழல் காற்று ஆனது 45 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை வேகத்தில் வீசக்கூடும் என்றும் கடல் பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 16 ஆம் தேதி அறிவித்தது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகள் ஆகியவற்றை பத்திரமாக உயரமான இடத்தில் நிறுத்தி வைக்கவும் மீன்பிடி சாதனங்களை பத்திரமாக வைக்க உத்தரவிடப்பட்டது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று (டிசம்பர் 27) முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 10 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல நேற்று இரவு முதல் தயாராகி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் இன்று அதிகாலை 5 மணியளவில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஏற்கெனவே கனமழை காரணமாக கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை சரியாக கொண்டாட முடியவில்லை என்றும் 10 நாட்களுக்கு பிறகு தற்போது மீன்பிடிக்க கடலுக்கு செல்வதால், நல்ல முறையில் மீன்பிடி தொழில் அமைந்து மீன்பாடு கிடைத்தால் மட்டுமே வரக்கூடிய புத்தாண்டை நல்ல முறையில் கொண்டாட முடியும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.