திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள பட்டா நிலம் மீட்கப்படும்:ஆட்சியர் உறுதி
திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆதிதிராவிட நலச்சங்க பட்டா நிலம் மீட்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்
திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆதிதிராவிட நலச்சங்கத்தின் பட்டா நிலம் மீட்டுத் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனிநபர் பட்டா நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், பட்டா வழங்கப்பட்ட திருச்செந்தூர் வருவாய் கோட்டம் திருச்செந்தூர் வட்டம் கீழத்திருச்செந்தூர் கிராமத்தில் 259ஏ, 5ஏ, 259ஏ, 6பி, 260ஏ, 2 ஆகிய புல எண்களில் ஆதிதிராவிடர் நலச்சங்கம் பெயரில் 74 செண்ட் நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக புகார் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த இடத்தை மீட்கக் கோரி ஆதிதிராவிடர் நலச்சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்துக்கு சுமூக தீர்வு காணும் பொருட்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாகவது:
பட்டா நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டத்தில் நில அளவர்களை கொண்டு அளவீடு மேற்கொண்டு அதன் பின்னர் பூமியில் இருக்கும் நிலப்பரப்பின் அடிப்படையில் தீர்வு காணப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள ஆதிதிராவிட நலச்சங்கத்தின் பட்டா நிலம் மீட்டுத் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.