மருத்துவர், செவிலியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.;
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்ப்பிணி ஒருவருக்கு மருத்துவப் பெட்டகத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தின விழிப்புணர்வு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து வட்டார அளவிலான ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையத்தினை திறந்து வைத்த அமைச்சர், தாய்சேய் நலப்பெட்டகம் ஒரு பயனாளிக்கும், பிறப்பு சான்றிதழ் ஒரு பயனாளிக்கும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் இரண்டு பயனாளிகளுக்கும், ஊட்டச்சத்து நலப்பெட்டகம் 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், மகப்பேறு சஞ்சீவினி பெட்டகம் 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், மக்களை தேடி மருத்துவப் பெட்டகம் 10 பயனாளிகளுக்கும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலத்தில் 6000 முதல் 7000 வரை டெங்கு பாதிப்பு இருக்கும். தமிழ்நாட்டில் அதிக அளவு டெங்கு பாதிப்பு என்று கணக்கிட்டால் 2012 ஆம் ஆண்டு 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். 26 பேர் உயிரிழந்தனர். 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். 65 பேர் மரணம் அடைந்தனர். இதுதான் தமிழகத்தில் அதிகபட்ச பாதிப்பு.
அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு, டெங்குக்கு தேவையான மருத்துவ வசதியை ஏற்படுத்துதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்டவைகளை முறையாக செய்ததால் நமக்கு டெங்கு கட்டுக்குள் உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை டெங்கு பாதிப்பு நான்காயிரத்து நானூற்று 54. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 390 பேர். தமிழகத்தில் டெங்கிற்கு இதுவரை மூன்று உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது,
வரும் ஆண்டுகளில் இந்த உயிரிழப்புகள் கூட இல்லாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு முடிந்தவுடன் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 30 சதவீதம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.