மரங்களில் ஆணி அடித்து சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் உறுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களில் ஆணி அடித்து சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் லட்சுமிபதி உறுதி அளித்தார்.;
தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டியின் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிப்பி கூடத்தில் வைத்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கிரீன் கமிட்டி தலைவருமான லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலரும், மாவட்ட கிரீன் கமிட்டி செயலருமான மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் பசுமையாக வைத்திருப்பது, மரங்களை பாதுகாப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடி பேசியதாவது:
மாவட்டத்தில், சாலை ஓரங்களிலும் மற்றும் தெருக்களிலும் உள்ள மரங்களில் பல தனியார் நிறுவனங்கள் விளம்பரப் பலகையை ஆணி அடித்தும் மற்றும் இரும்பு கம்பியால் கட்டி வைத்து உள்ளனர். இதனால் மரங்கள் உளுத்து உறுதி தன்மையற்று போகிறது.
இதன் காரணமாக மரங்களின் ஆயுள் தன்மையை குறைந்து விரைவில் மரம் பட்டு விழுந்து விடுகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினர் கென்னடி வலியுறுத்தினார்.
அதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசும்போது, மரங்களில் ஆணி அடித்தும், இரும்பு கம்பிகளை கட்டியும் சேதப்படுத்தும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும், மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.