தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை முயற்சி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் தொழிலாளி தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தளை அருகே உள்ள கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான பாலமுருகன் மனு அளிக்க வந்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க ஏராளமானோர் கூடியிருந்த நிலையில், பாலமுருகன் திடீரென தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றியபடி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தீக்குளிக்க முயன்ற பாலமுருகனை மீட்டு அவரது தலையில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். தண்ணீர் குறைவாக இருந்த காரணத்தால் மண்ணெண்ணெய் ஊற்றிய பாலமுருகன் ஐயோ கண் எரிகிறது கண் எரிகிறது என சுமார் ஐந்து நிமிடங்கள் கூச்சலிட்டபடி ஆட்சியர் அலுவலகம் முன்பு அழுது புரண்டார்.
இதையெடுத்து அவர் மீது மீண்டும் தண்ணீரை ஊற்றிய காவல் துறையினர் அவரை மீட்டு விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாலமுருகன் போலீசாரிடம் கூறுகையில், தனக்கும் அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. அருணாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் பசுவந்தளை காவல்துறையினர் தன் மீது பொய் வழக்கு போடுவதாகவும் இதுகுறித்து பல இடங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.