இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி அருகே இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக வைத்து இருந்த ஒரு டன் பீடி இலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் மற்றும் பீடி இலைகள் கடத்தப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் இன்று அதிகாலை க்யூ பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைப்பாறு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல டெம்போ வாகனத்தில் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று வாகனங்களை தணிக்கை செய்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக 40 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த வாகனத்தில் வந்த திருநெல்வேலியை சேர்ந்த லூர்து அந்தோணி (41) வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (37) முத்துக்குமார் (32), சிவபெருமாள் (38), செந்தூர் (20), சரவணன் (23) ஆகிய 6 பேரை க்யூ பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக பீடி இலைகளை டெம்போ வாகனத்தில் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கைதான 6 பேரும் குளத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.