தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடயவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை, கொலை முயற்சி, புகையிலைப் பொருட்கள் கடத்தல், போக்சோ வழக்குகளில் கைதானவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு ஏராளமானோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 15.04.2023 அன்று தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்தராஜ் (26) என்பவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20) மற்றும் சிலர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக ஆனந்தராஜை வழிமறித்து தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் சந்திரன் உட்பட 3 பேரை கைது செய்தனர். கொலை முயற்சி வழக்கின் முக்கிய எதிரியான சந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கொலை முயற்சி வழக்கில் கைதான தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சேகர் மகன் சந்திரன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் கைதான சந்திரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.