தூத்துக்குடி வல்லநாடு மலைப்பகுதியில் புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மலைப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின்போது புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு மலைப் பகுதியில் மான் உள்ளிட்ட சில வனவிலங்குகள் உள்ளன. இங்கு வெளி மான்சரணாலயம் உள்ளது. வல்லநாடு மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் மான்கள் சில வல்லநாடு, மணியாச்சி, கங்கைகொண்டான் பகுதியில் சாலைகளில் வாகனங்களில் மோதி உயிரிழக்கும் நிலையும் ஏற்படுவது உண்டு.
இதற்கிடையே, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் தேஜஸ் தாக்கரே தலைமையில் இயங்கி வரும் தாக்கரே வைல்டு லைவ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல் உயிரினங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் குழு வல்லநாடு காப்புக்காடு மற்றும் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஊர்வன பாதுகாப்பு ஆய்வாளர்கள் ராமேஸ்வரன் மாரியப்பன் இருந்தார்.
இதற்காக பார்வதி அம்மன் கோவில், வல்லநாடு காப்புக்காடு, மணக்கரை மற்றும் குருமலை காப்புக் காட்டில் ஆய்வு மேற்கொண்டபோது பெருமாள் கோவில் அருகே புதிதாக ஒரு பல்லி இனத்தினை கண்டுபிடித்தனர். அந்த பல்லிக்கு குவார்ட்சைட் புரூக்லிஷ் கெக்கோ அல்லது தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோ என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.
பல்லி இனத்தை பொறுத்தவரை இந்திய அளவில் 53 ஆவது பல்லி இனம் ஆகும். தமிழக அளவில் 7 ஆவது பல்லி இனம் ஆகும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய வகை பல்லி இனம் தனித்துவம் வாய்ந்தது ஆகும். அதன் முதுகு செதில்கள், தொடைப்பகுதி விநோதமாக உள்ளது. தொடர்ந்து ஆய்வு குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.