தூத்துக்குடி போலி ஆவண வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
போலி ஆவணம் தயார் செய்த வழக்கில் 10 வருடம் தலைமறைவாக இருந்தவரை தூத்துக்குடி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட பாஸ்கர்.
தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என். வேடப்பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சண்முகவேல் மற்றும் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்த சிவானந்தம் மகன் பாஸ்கர் (61) ஆகிய இருவரும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளனர்.
அப்போது சண்முகவேல் பணி ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பெற்ற சண்முகவேல் கடந்த 12.06.2008 அன்று ஓய்வூதியம் பெறுவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளார். ஆனால் சண்முகவேல் கோவில்பட்டியில் உள்ள வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளதால் அவருக்கு தடையில்லா சான்றிதழை பள்ளி நிர்வாகம் கொடுக்கவில்லை.
இதனால் ஆசிரியர்களான சண்முகவேல் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரும் உதவி தொடக்கக் கல்வி அலுவலரான லட்சுமி என்பவரது கையொப்பமிட்டு போலியான தடையில்லா சான்றிதழ் தயார் செய்து, அதனை ஓய்வூதியம் பெறுவதற்கு உண்மையான சான்றிதழ் போன்று பயன்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் செயலாளர் சீனிவாசகம் என்பவர் அளித்த புகாரின் பேரில் சங்கலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகவேல் மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவரையும் கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய சண்முகவேல் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மற்றொருவரான பாஸ்கர் கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து தலைமறைவாக இருந்து வரும் பாஸ்கரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நடவடிக்கை மேற்கொண்டார்.
விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெட்ரிக்ராஜன் தலைமையில் தலைமைக் காவலர்கள் காசி, மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் காவலர்கள் பிரபு பாண்டி மற்றும் முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பாஸ்கரை போலீசார் இன்று கைது செய்தனர். 10 வருடம் தலைமறைவாக இருந்து வந்த பாஸ்கரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.