சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

கோவில்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2022-12-15 11:55 GMT

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி தாமஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 52). தொழிலாளியான இவர், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2019 ஆண்டு பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர். இந்த வழக்கை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி புலன் விசாரணை செய்து கடந்த 28.02.2019 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன் குற்றம்சாட்டப்பட்ட சண்முகராஜிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து சண்முகராஜ் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பாளயங்கோட்டை  மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். 

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதிக்கும், குற்றம்சாட்டப்பட்ட சண்முகராஜிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் மகேஸ்வரி ஆகியோருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News