அழகுமுத்து கோன் ஜெயந்தி விழாவில் விதிமுறையை மீறியதாக வழக்குப்பதிவு

அழகுமுத்து கோன் ஜெயந்தி விழாவில் காவல் துறையின் விதிமுறையை மீறியதாக 286 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-14 09:41 GMT

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணி மண்டபத்தில் அவரது 313 ஆவது ஜெயந்தி விழா கடந்த 11.07.2023 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில் பங்கேற்க வந்தவர்கள் சிலர் கட்டாலங்குளத்தில் உள்ள நுழைவு வாயிலில் சமுதாய கொடியை ஏற்ற முயன்றதால் பரபரப்பு நிலவியது. அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதற்கிடையே, இந்த விழாவில் இருசக்கர வாகன பேரணி செல்வதற்கு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும், பெண்கள் மற்றும் பொதுமக்களை இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாமலும் விதிமுறைகளை மீறி செயல்படக் கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விதிமுறைகளை மீறியதாக 45 இருசக்கர வாகனங்கள் மீது 110 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளும், 65 நான்கு சக்கர வாகனங்கள் மீது 150 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 22 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் தேவைப்படும் பட்சத்தில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News