தூத்துக்குடி அருகே சொத்து தகராறில் தொழிலதிபர் அடித்துக் கொலை
தூத்துக்குடியில் தொழிலதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர், இரண்டு லாரி வைத்து தொழில் செய்து வந்தார். லாரி போக்குவரத்து தொழிலில் போதிய வருவாய் இல்லாததால் நல்ல தம்பிக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் தனக்கு தெரிந்த நபர்களிடம் ரூ. 50 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தாராம்.
இந்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக தனது பூர்வீக வீட்டை விற்க நல்லதம்பி முடிவு செய்துள்ளார். ஆனால், அதற்கு நல்லதம்பியின் சகோதரர் முத்துராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சகோதரர்கள் இடையே கடந்த சில நாட்களாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இதற்கிடையே, சகோதரர்களிடையே அவர்கள் உறவினர்கள் சமரசம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சில்லநத்தம் கிராமத்திற்கு சென்று பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என நல்லதம்பி, அவரது சகோதரர் முத்துராஜ், உறவினரான முத்துராஜ் ஆகியோர் காரில் கிராமத்திற்கு சென்று உள்ளனர். அப்போது சகோதரர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே காரில் இருந்த நல்லதம்பி திடீரென கீழே குதித்து பண்டாரம்பட்டி காட்டுப் பகுதியில் தப்பி ஓட முயன்றுள்ளார்.
சிறிது நேரத்தில் நல்லதம்பி தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸார் பண்டாரம்பட்டி காட்டுப்பகுதிக்குச் சென்று நல்லதம்பியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நிகழ்ந்த இடத்தை தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் நல்லதம்பியை அவரது சகோதரர் முத்துராஜ் மற்றும் உறவினர் முத்துராஜ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் புதியம்புத்தூர் போலீஸார் கைது செய்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, கொலையுண்ட நல்லதம்பிக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்ததாகவும், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.