தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 07.09.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், ஏனாதி பகுதியை சேர்ந்த நாகஜோதி (50) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் காரில் வைத்து தீயிட்டு எரிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்களான மைக்கேல்ராஜ் (29) அவரது சகோதரரான குழந்தை கனி (26), சுந்தர கணபதி (26) மற்றும் சாயல்குடி உரைக்கிணறு பகுதியை சேர்ந்த மாரி (27) ஆகியோரை குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் கைதான மைக்கேல்ராஜ், குழந்தை கனி, மாரி மற்றும் சுந்தர கணபதி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த 11.09.2023 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் சவேரியார்புரம் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதியை சேர்ந்த முகேஷ் (20) மற்றும் சிலரை முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான முகேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த 07.09.2023 அன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்த வழக்கில், தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த யோசேப் (27) மற்றும் தூத்துக்குடி சிதம்பரநகர், திம்மையார் காலனியை சேர்ந்த வேல்முருகன் (35) மற்றும் சிலரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான யோசேப் மற்றும் வேல்முருகன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையெடுத்து, கொலை வழக்கில் கைதான மைக்கேல்ராஜ், அவரது சகோதரரான குழந்தை கனி, சுந்தர கணபதி , சாயல்குடி உரைக்கிணறு பகுதியை சேர்ந்த மாரி ஆகியோரையும், கொலை முயற்சி வழக்கில் கைதான முகேஷ், யோசேப் மற்றும் பாலியல் வழக்கில் கைதான தூத்துக்குடி சிதம்பரநகர், திம்மையார் காலனியை சேர்ந்த வேல்முருகன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் உட்பட 144 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.