தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில், 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 6 பேர், ஒரே நாளில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.;
தூத்துக்குடி மாவட்டத்தில், குண்டர் தடுப்பு சட்டத்தில், ஆறு பேர் கைது (மாதிரி படம்)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் விற்பனை, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் கைதான 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் உட்பட 105 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 06.07.2023 அன்று தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைக்குளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள ஒரு கோவிலின் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்களான சுந்தர் (22), கிருஷ்ணமூர்த்தி (19), விக்டர் (19), தூத்துக்குடி அடைக்காலபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (22) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த சுந்தர் (24) ஆகியோரை தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சவையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று கடந்த 06.07.2023 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் பேருந்து நிலையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி (41) என்பவரை விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வழக்குகளில் கைதானவர்களில் சுந்தர், கிருஷ்ணமூர்த்தி, விக்டர், பாலசுப்பிரமணியன், சுந்தர் மற்றும் மாடசாமி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்படி, தூத்துக்குடி செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சுந்தர், கிருஷ்ணமூர்த்தி, விக்டர், தூத்துக்குடி அடைக்காலபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திருக்குறுங்குடி பகுதியை சேர்ந்த சுந்தர் மற்றும் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த மாடசாமி ஆகிய 6 பேரும் மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.