தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம்
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்குகளில் கைதான நான்கு பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, புகையிலைப் பொருட்கள் விற்பனை, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் கைதான 12 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட இருவர் உட்பட 99 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 04.07.2023 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி எப்.சி.ஐ ரவுண்டானா சந்திப்பு எதிரே வைத்து அதே பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (37) என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த பாலமுருகன் (23), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த அழகுமுத்து (21) மற்றும் மாதேஸ்வரன் (23) ஆகியோரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேலும், கடந்த 20.07.2023 அன்று தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சத்யாநகர் பகுதியில் வைத்து முன்விரோதம் காரணமாக ஒரு பெண்ணிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி கீதாஜீவன் நகரை சேர்ந்த உதயமூர்த்தி (23) என்பவரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை முயற்சி வழக்குகளில் கைதான பாலமுருகன், அழகுமுத்து, மாதேஸ்வரன் மற்றும் உதயமூர்த்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையெடுத்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில், புதுக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த பாலமுருகன், புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்தவர்களான அழகுமுத்து, மாதேஸ்வரன், தூத்துக்குடி கீதாஜீவன் நகரை சேர்ந்த உதயமூர்த்தி ஆகிய நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் நான்கு பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.