தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவைக்காக தேசிய அளவில் 3-ம் பரிசு
தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்காக அகில இந்திய அளவில் மூன்றாவது பரிசு கிடைத்து உள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடி மாநகாரட்சி ஆணையர் தினேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சியானது சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை மாநகர வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறது. பொது மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்/
குறிப்பாக, இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் அறிவியல் பூங்காக்கள், அறிவுசார் மையங்கள், கல்வி கற்றலில் சிறப்பான பள்ளிக் கட்டிடம், கையடக்க கணினி மூலம் மாணவர்கள் தற்கால நவீன யுக்திகளை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கையாளும் வகையிலான பணிகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பான கல்வியினை வழங்கும் பணியினை தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பாக நிறைவேற்றியுள்ளது.
இந்த கட்டமைப்புகளை நவீன காலத்திற்கு ஏற்றவாறு நிறைவேற்றியதின் விளைவாக மாணவர் சேர்க்கையானது கடந்த கல்வி ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காக உயர்ந்துள்ளதுடன் குறிப்பாக, மாணவியரின் சேர்க்கை விகிதம் பெருமளவில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில், இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத் திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான போட்டியில் கல்விப் பணியில் சமூக பொருளாதார கட்டமைப்பின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம் ,சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது பரிசு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது செப்டம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய நிகழ்வில் இந்திய ஜனாதிபதியால் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.