தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு!
40 சதவீத வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நைடபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3000 லாரிகள் இயக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சரக்குகளை கொண்டுச் செல்வதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கும் அதிகளவில் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த லாரிகளுக்கு அண்மையில் சேவை வரி உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு உயர்த்தி உள்ள காலாண்டு சேவைக்கான வரி 40 சதவீதம் உயர்வை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் மற்றும் தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேசன் உள்ளிட்ட சார்பில் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ 3000 லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் அனைத்தும் துறைமுக சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியத் தொழிலான உப்பு ஏற்றுமதி, தீப்பெட்டி ஏற்றுமதி ஆகியவை இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை சில நாட்களில் வர உள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கான லாரிகள் மட்டும் இயங்க அனுமதித்து உள்ளனர்.
மேலும், தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கால வரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன இணைச் செயலாளர் சுப்புராஜ் தெரிவித்து உள்ளார்.