தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு ஏராளமானோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 12.06.2023 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர் நேரு காலனியை சேர்ந்த பால் மகாராஜா (39) என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி அன்பு (32) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். கைதான பால் மகாராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதேபோல, கடந்த 09.06.2023 அன்று தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தெர்மல்நகர் அனல்மின்நிலைய குடோனில் இருந்து ரூபாய் 45,000 மதிப்புள்ள காப்பர் நிக்கல் குழாய்களை திருடிய வழக்கில் கோவில்பட்டி திலகர் நகரை சேர்ந்த ஜெயபிரேம் சிங் (42), தெர்மல்நகர் முத்துநகரை சேர்ந்த பிரகாஷ் (26) மற்றும் சிலரை தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த திருட்டு வழக்கில் கைதான ஜெயபிரேம் சிங் மற்றும் பிரகாஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், தாளமுத்துநகர் நேரு காலனியை சேர்ந்த பால் மகாராஜா, கோவில்பட்டி திலகர் நகரை சேர்ந்த ஜெயபிரேம் சிங் மற்றும் தெர்மல்நகர் முத்துநகரை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 பேர்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உட்பட 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.