தூத்துக்குடியில் காரில் சென்று ஆடு திருடிய கும்பல்: 3 பேர் கைது
தூத்துக்குடியில் காரில் சென்று ஆடு திருடியவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்து சென்ற பெண்ணிடம் காரில் வந்த இரண்டு இளைஞர்கள் திடீரென அவர் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனை கண்டவர்கள் இப்பெடியெல்லாமா? திருடர்கள் இருப்பார்கள் என வியப்படைந்தனர்.
அந்த சம்பவத்தையே மிஞ்சும் வகையில் தூத்துக்குடியில் காரில் சென்று ஆடு திருடியதாக ஒரு கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது இன்னும் வியப்படையச் செய்துள்ளது.
தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரைச் சேர்ந்த பால்ராஜ் (40) என்பவருக்கு சொந்தமான ஆடு கடந்த 15.06.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கண்ணுபுரம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்த ஆட்டை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்த சரவணன் (33), தூத்துக்குடி அண்ணா நகர் மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) மற்றும் தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த ராமர் (50) ஆகிய 3 பேரும் சேர்ந்து பால்ராஜின் ஆட்டை காரில் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் ஆடு திருடியதாக சரவணன், மணிகண்டன் மற்றும் ராமர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த ரூபாய் 10,000/- மதிப்புள்ள ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.