தூத்துக்குடியில் 2200 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்: ஒருவர் கைது

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வேனில் கொண்டுவரப்பட்ட 2200 லிட்டர் கலப்பட டீசலை தனிப்பிரிவு போலீசார் கைப்பற்றி ஒருவரை கைது செய்தனர்.

Update: 2023-07-13 13:21 GMT

தூத்துக்குடியில் போலீசார் பறிமுதல் செய்த கலப்பட டீசல் பேரல்கள்.

டீசல் விலை உயர்வு காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு விலை குறைவாக கிடைக்கும் கலப்பட டீசல் மற்றும் பயோ டீசலை வாங்கி பயன்படுத்தி வருவதாக தனி பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது

இதைத் தொடர்ந்து நேற்று இரவு விசைப்படகு மீன்பிடி துறைமுகம் முன்பு தனி பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் 11 பேரல்களில் எவ்வித ஆவணமும் இன்றி கொண்டுவரப்பட்ட 2200 லிட்டர் டீசலை கைப்பற்றி சோதனை செய்தனர்.

அந்த வேனில் கொண்டுவரப்பட்டது கலப்பட டீசல் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கலப்பட டீசலை மீனவர்களிடம் விற்பனைக்காக கொண்டு வந்த வர்த்தகரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் முத்துசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து தனிப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்த 2200 லிட்டர் கலப்பட டீசல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் கைது செய்யப்பட்ட வேன் டிரைவர் ஆகியோரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கலப்பட டீசலை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். தூத்துக்குடி மாநகரில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 5200 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கலப்பட டீசல் விற்பனையில் மீனவர்கள் மற்றும் லாரிகளை குறி வைத்து சிலர் சட்டவிரோதமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த கலப்பட டீசல் விற்பனை காரணமாக தமிழக அரசுக்கு அங்கீகரிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் டீசல் விற்பனை நிலையங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாய் பாதிக்கப்படுவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News