தூத்துக்குடி, திருச்செந்தூரில் பைக்கில் சாகசம் செய்த 2 இளைஞர்கள் கைது
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வோர் மற்றும் சாலைகளில் சாகசத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை சாலையில் ஒருவர் பைக்கில் சாகசம் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துதல் மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் பிரவீன் ராஜ் (வயது19) என்பது தெரியவந்தது. இதையெடுத்து, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்குப் பதிவு செய்து பிரவீன்ராஜை கைது செய்தார். சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமன்குறிச்சி சந்திப்பு பகுதியில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துதல் மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பரமன்குறிச்சி அரங்கன்விளை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் டைட்டஸ் டேனியல் (20) என்பவர் அந்த சாகச சம்பவ இடத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிறிஸ்துராஜ் சாகசத்தில் ஈடுபட்ட டைட்டஸ் டேனியலை கைது செய்து சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.