தூத்துக்குடி மாவட்டத்தில் 166 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்..!
உணவு பாதுகாப்பு உரிமமின்றி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கிய ஜவுளி கடையில் இருந்து 10 கிலோ லட்டு பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டார்.;
தீபாவளி பண்டிகை காலத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகள் மற்றும் கார வகைகளின் தரத்தினை உறுதி செய்ய தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி நகரங்கள் மற்றும் எட்டயபுரத்தில் உள்ள ஸ்வீட் ஸ்டால்கள் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜோதிபாஸூ மற்றும் காளிமுத்து ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டாலில் அதிகபட்சமாக கலர் இருந்த 10 கிலோ ஜிலேபி மற்றும் பலகாரம் தயாரிக்க வைத்திருந்த 20 கிலோ அயோடின் கலக்காத உப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத 5 கிலோ பொட்டலமிடப்பட்ட நொறுக்கத்தீனிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
அதுபோல், கோவில்பட்டி நகரில் உள்ள ஸ்வீட் ஸ்டால்களில் ஆய்வு செய்த போது, இளையரசனேந்தல் சாலையில் உள்ள ஒரு கடையில் பலகாரம் தயாரிக்க வைத்திருந்த காலாவதி தேதி குறிப்பிடப்படாத 30 கிலோ கம்பு மாவு, 30 கிலோ கேழ்வரகு மாவு, லேபிள் விபரங்கள் இல்லாத 14 கிலோ முந்திரி பருப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத பால் ஸ்வீட் 17 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தகவலின் அடிப்படையில் கோவில்பட்டியில் உள்ள முன்னணி ஜவுளி கடையில் ஆய்வு செய்தபோது, அக்கடையில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக லட்டு வழங்குவது கண்டறியப்பட்டு, 10 கிலோ லட்டு மற்றும் அதனை பொட்டலமிடப் பயன்படுத்தப்பட்ட பாக்ஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த நிறுவனம் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கீழஈரால் பகுதியில் உள்ள பிரபல ஸ்வீட் ஸ்டால்களில் ஆய்வு செய்தபோது, காலாவதி தேதி குறிப்பிடப்படாத 20 கிலோ நொறுக்குத்தீனிகள், உரிமம் இல்லால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 20 கிலோ உணவு எண்ணெய் வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வணிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.