228 கிலோ கஞ்சா கடத்திய இலங்கையை சேர்ந்தவர் உள்பட 16 பேர் கைது

தூத்துக்குடியில் இரண்டு கார்களில் கடத்தப்பட்ட 228 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 16 பேரை கைது செய்தனர்.

Update: 2023-08-29 16:26 GMT

தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில், அந்த கார்களில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ஆரோன் (31) மற்றும் அவரது மனைவி சிபானியா (31), தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த இசக்கி கணேஷ் (29), இலங்கையை சேர்ந்த தற்போது சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த ஜோசப் ஸ்ரீபாலன் கெனியு பினிஷ் (63), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ராஜா (30), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சஜின் ரெனி (35), திருநெல்வேலி மாவட்டம் பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி இந்திரகாந்தி (23), சென்னை பரங்கிமலையை சேர்ந்த தயாளன் (45), தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (32), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான காளீஷ்வரன் (24), விக்னேஷ்வரன் (29), திருமேனி (29), சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சம்பத்குமார் (50), கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டிணம் பகுதியை சேர்ந்த சரவணன் (45) ஆகியோர் கார்களில் இருந்தது தெரியவந்தது.

மேலும், அவர்கள் கஞ்சா கடத்தியதும், அவர்களுடன், செல்லும் வழியில் போலீசார் இருப்பது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு பகுதியை சேர்ந்த திருமணிக்குமரன் (27) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த அருண்குமார் (27) ஆகியோர் கஞ்சா கடத்துவதற்கு உதவியதும் தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் 16 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சா, கடத்தி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஆரோன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 09.05.2023 அன்று ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வேலவன் புதுக்குளம் பகுதியில் ஒரு கோழிப்பண்ணையில் 2000 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் மதுரை மாவட்டம் கீரைத்துறை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்தவர் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

228 கிலோ கஞ்சா மற்றும் கார்களை பறிமுதல் செய்து 16 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

Tags:    

Similar News